உயிரியல் நோக்கில் தொல்காப்பியம்
திரு.சு. பிரபாகரன்
(சனவரி 2013 புதுச்சேரி தாகூர் கல்லூரியில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் வெளிவந்த கட்டுரை)
நாம் இன்று அறிவியல்
யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இவ்வறிவியல் யுகத்தில் அனைத்தையும்
அறிவியலின் கண் கொண்டு சென்று அதனைக் காரண காரியத்தோடு ஆராய்ந்தறியும் நிலைமை
இன்று நிலவுகிறது. இன்று அறிவியல் புகாத துறையே இல்லை என்று சொன்னால் அது
மிகையாகாது. இந்த அதிவேக அறிவியல் வளர்ச்சிக்கு காரணமாய் அமைவது மிகவும் தொன்மை
வாய்ந்த மொழிகளும், மொழிக்கூறுகளுமேயாகும். மொழிக்கூறுகள் என்பது மொழியின் வாயிலாக
உருவான இலக்கிய, இலக்கணக் கோட்பாடுகளேயாகும். இந்தக் கோட்பாடுகளே அறிவியல் போன்ற
பல்துறை தோன்றக் காரணமான வித்தாகும். இவ்வகையில் உலகின் மிகத் தொன்மை மொழியெனக்
கூறப்படும் தமிழ் மொழியின் முதல் நூலும், உலக முதல் இலக்கண நூலுமான
தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள உயிரியல் செய்திகளை எடுத்துக் கூறுவதே
இக்கட்டுரையின் பணியாகும்.
உயிரியல் நோக்கில் தொல்காப்பியம்
தொல்காப்பியம் தமிழ் மொழியின் இலக்கணத்தைக் கூறும் இலக்கண
நூல் என்றுதான் பலரும் அறிவர். ஆனால் அவற்றை யாரும் பல்துறைச் சிந்தனையில்
பார்ப்பதில்லை. தொல்காப்பியம் தமிழ் மொழிக்கு இலக்கணம் கூறுவதோடு நின்று விடாமல்
பல்துறை வளர்ச்சிக்கும் துணையாய் நிற்கிறது. இன்று உலகே வியக்கும் அறிவியல்
சித்தாந்தங்களுக்கும் தொல்காப்பியம் உதவி புரிகின்றது. அறிவியலில் இன்று
பல்வேறுபட்ட ஆராய்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இவற்றில் உயிரியலும்
ஒன்று. இவ்வுயிரியல் சார்ந்த செய்திகள்
தொல்காப்பியத்தில் எங்ஙனம் அமைந்துள்ளது என்பதை தொல்காப்பியம் பொருளதிகார
மரபியலில் இடம் பெற்றுள்ள சில நூற்பாக்களின் மூலம் விளக்கி தெளிவோம்.
“புல்லும் மரனும் ஓரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”1
என்னும் நூற்பாவில்
தொல்காப்பியர் தாவரவியல் பற்றி குறிப்பிடுகிறார்.
‘புல்லும் மரனும் ஓரறிவினவே’ என்றதனால் ‘புல்’ என்பது புறவயிர்ப்பு உடையன என்றும் ‘மரம்’ என்பது அகவயிர்ப்பு உடையன என்றும் இளம்பூரணார்
கூறுகின்றார். பேராசிரியரும் புறக்காழனவாகிய ‘புல்லும்’ அகக்காழ்னவாகிய மரனும் ஓரறிவுடைய உயிர் என்று கூறுகிறார். இவர்களுக்கு
முன்னே தொல்காப்பியரும்
“புறக்கா ழனவே புல்லென மொழிப
வகக்க ழனவே மரமென மொழிப”2
என்று கூறியுள்ளார்.
தாவரவியல் அடிப்படையில் பார்த்தோமேயானால் புல் என்பது ஒரு
வித்திலைத் தாவரமாகும். ஒருவித்திலைத் தாவரமாவது, தமது வித்துக்களில் ஒரு
வித்திலைக் கொண்ட தாவரம். உதாரணமாக நெல், சோளம், கோதுமை, வெங்காயம், மூங்கில்,
தென்னை மற்றும் மேய்ச்சற் புற்கள் ஆகியனவாகும். இவற்றை உற்றுநோக்கின் அதன் வளர்கரு
ஒருவித்திலைகளைக் கொண்டிருப்பது புலப்படும். தொல்காப்பியர் கூறிய ‘புறக்காழே’ இன்றைய தாவரவியலார் கூறும்
ஒருவித்திலைத் தாவரமாகும்.
மேலும், ‘புல்லும் மரமும் ஓரறிவு’ என்றதில்
மரமாவது தாவரவியலார் கூறும் இரு வித்திலைத் தாவரமாகும். இருவித்திலைத் தாவரமாவது,
தமது வித்துக்களில் இரு வித்திலைகளைக் கொண்ட தாவரமாகும். உதாரணமாக மா, பலா, புளி,
வேம்பு, இலுப்பை, ஓமை, புன்னை, வாகை, தேக்கு ஆகியனவாகும். இங்கு உதாரணமாக
கூறப்பட்டுள்ள தாவரங்களின் வளர்கருவை உற்று நோக்கின் அது இரு வித்திலைகளைக்
கொண்டுள்ளமையை உணரலாம். தொல்காப்பியர் கூறிய ‘அக்காழாகிய’ மரமே இன்று தாவரவியலார் இருவித்திலைத் தாவரம் என்று குறிப்பிடுகின்றனர்.
இவற்றை கு.வி.
கிருஷ்ணமூர்த்தி, “தொல்காப்பியர் சுட்டும் அகக்காழ் உடையவை
இருவித்திலைத் தாவரங்களைக் குறிக்கின்றன. தொல்காப்பியர் சுட்டுகின்ற புல் வகைகள் தாவரவியலார் குறிப்பிடும்
ஒருவித்திலைத் தாவரங்களைச் சுட்டுகின்றன”3
“நந்தும் முரளும் ஈரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”4
என்னும்
நூற்பாவில் தொல்காப்பியர் முது கெலும்பற்ற மெல்லுடலிகளைப் பற்றிக் கூறுகின்றார்.
‘நந்தும் முரளும் ஈரறிவினவே’ என்றதனால். இளம்பூரணார் ஈரறிவுயிரான நந்தும், முரளுமென்று சொல்லுவ
என்கிறார். நந்து என்றதனால் சங்கு, நத்தை, அலகு, நொள்ளை என்பன கொள்க. முரள்
என்றதனால் இப்பி, கிளிஞ்சல், ஏரல் என்பன கொள்க என்றும் கூறுகிறார். இவ்வுயிரிகள்
அனைத்தும் விலங்கியார் குறிப்பிடும் ‘மெல்லுடலி’ வகையைச் சேர்ந்தவையாகும். இம்மெல்லுடலிகளின் தலையின் மேல் உணர்கைகள்
உள்ளன. இந்த மெல்லுடலிகளின் வாயின் அடிப்பகுதியில் நாக்கு போன்ற அமைப்பு உள்ளது. இவற்றால்
இவை சுவைக்கின்றன. மெல்லுடலிகள் பற்றிய இன்றைய ஆய்வுகளுக்கும் தொல்காப்பியம்
வழிவகுத்துள்ளது என்பது இதன் மூலம் அறியலாகின்றது.
“சிதலும்
எலும்பும் மூவறிவினவே
பிறவும் உளவே
அக்கிளைப் பிறப்பே”5
என்னும் நூற்பாவில் தொல்காப்பியர் முதுகெலும்பற்ற விலங்கின
தொகுதியில் கணுக்காலிகளைக் குறிப்பிடுகின்றார். ‘சிதலும் எறும்பும் முவறிவினவே’ என்றதனால் ‘சிதல்’ என்பது கரையான், ஈசல் போன்றவற்றையும்; ‘எறும்பு’ என்பது
நெருப்பெறும்பு, கட்டெறும்பு போன்ற பூச்சியினங்களைக் குறிக்கும். இவ்வகை உயிர்கள்
தொல்காப்பியர் பகுத்த ‘மூன்றறிவது அவற்றோடு மூக்கே’ என்றதனால் உடம்பால் உற்றறியும் அறிவும் நாவால் சுவைக்கக் கூடிய
சுவையறிவும் பெற்று மூக்கினால் நன்னாற்றம், தீநாற்றம் அறியும் கணுக்காலிகள் ஆகும்.
‘பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’ என்றதனால்
மூன்றறிவு உயிர்களுக்கு தொல்காப்பியர் பகுத்த தன்மை கொண்ட பூரான், அட்டை, தேள்,
சிலந்தி, கறையான் (சிதல்), எறும்புகள்
போன்ற பூச்சிகளும் முதுகெலும்பற்ற பிரிவில் கணுக்காலி தொகுதியைச் சார்ந்தவையாகும்.
“நண்டுந் தும்பியும் நான்கறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”6
தொல்காப்பியர் கூறும்
நான்கறிவுயிரும் துணுக்காலிகள் தொகுதியைச் சேர்ந்தவையாகும். ‘நண்டுந் தும்பியும் நான்கறி வினவே’
என்றதனால், நண்டும் தும்பியும் நான்கறிவு பெற்ற கணுக்காலிகள் ஆகும். இவ்வகை
விலங்கினங்கள் உலகைக் கண்டுகளிக்கும் கண்ணுறுப்பை பெற்ற விலங்குகளாகும். இவற்றையே தொல்காப்பியர் ‘நான்கறிவதுவே
அவற்றோடு கண்ணே’ என்கிறார். ‘பிறவும்
உளவே அக்கிளைப் பிறப்பே’ என்றதனால் உலகை காணும் புலனுறுப்பைப்
பெற்று கூறப்படாத வண்டு, தேனீ போன்ற விலங்கினங்களும் இத்தொகுதியில் அடங்கும்.
இவ்வாறு ஈரறிவு முதல்
நான்கறிவு உயிர்வரை இன்று அறிவியல் அறிஞர்கள் வகுத்துள்ள முதுகெலும்பற்றவை,
முதுகெலும்புடையவை என்ற பிரிவில் முதுகெலும்பற்றவையாகும்.
“மாவும் புள்ளும் ஐயறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப்
பிறப்பே”7
என்னும் நூற்பாவில் தொல்காப்பியர் முதுகெலும்புடைய விலங்குகளான ஊர்வன, பறப்பன,
பாலூட்டிகள், மீன்கள் முதலானவற்றைச் சுட்டுகிறார்.
‘மாவும் புள்ளும் ஐயறி வினவே’ என்றதனால்
இளம்பூரணார், “நாற்கால் விலங்கும் புள்ளும் ஐயறிவுடைய”8 என்கிறார். மெய்யப்பன் தமிழ் அகராதி, ‘மா’ என்றால் விலங்கையும், ‘புள்’ என்றால்
பறவையையும் குறிக்கின்றது. விலங்கு என்பதால் உலகில் காணப்படும் அனைத்து
விலங்கினங்களும், பறவை என்பதால் அனைத்து பறவையினங்களையும் உள்ளடக்கியதாகும். ‘பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’ என்றதனால் உணர்வு,
சுவை, முகர்தல், கண்டுகளிக்கும் தன்மை ஆகியவற்றோடு செவியறிவைப் பெற்று கூறப்படாத
பிறவகை உயிரினங்களும் ஐந்தறிவு உயிர் என்பதாம். இவ் உயிரினங்களுக்கு முதுகெலும்பு
வாழ்நாள் முழுதும் காணப்படுகின்றது. இவ்வகை விலங்குகளுக்கு அறிவியல் அறிஞர்களின்
கூற்றுப்படி வால் உண்டு. இந்த முதுகெலும்புடைய விலங்குகளை தொல்காப்பியர் ஐயறிவு
உயிராக குறுப்பிடுகிறார். இவை இன்றைய விலங்கியல் வளர்ச்சிக்கு பெரிதும் துணை
நிற்பதை நாம் அறியலாம்.
உயிரியல் பரிணாமத்தின்
இறுதி உயிரி மனிதர் ஆவர். சிந்திக்கும் ஆற்றல் பெற்ற உயிரியும் மனிதரேயாவார்.
இம்மனிதன் “இயற்கைப் பொருள்களுள் மனிதனும் ஒரு கூறு.
மனிதன் தானே சிந்தித்துச் செயல்படும் ஆற்றல் உடையவன். சூழ்நிலைக் கேற்ப தன்னை
மாற்றிக் கொள்வதோடு சூழ் நிலையே தனக்கேற்றவாறு மாற்றியமைத்துக் கொள்ளும் வலிமையும் பெற்றவன். இதற்கு காரணமாக அமைவது
அவனுடைய பகுத்தறிவே. பகுத்தறிவு பெற்ற காரணத்தினாலேயே அவன் பிற உயிரிகளிலிருந்து
மாறுபட்டு, அவற்றைவிட உயர்ந்தவனாக விளங்குகிறான். இக்காரணம் பற்றியே மனிதன்
உயர்திணையாகப் போற்றப் பெறுகிறான்”9 என்பர் வே.
நெடுஞ்செழியன்.
இவற்றைத் தொல்காப்பியர்,
“மக்கள் தாமே ஆறறி வுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”10
என்னும் நூற்பாவில்
கூறுகின்றார்.
‘மக்கள் தாமே ஆறறி வுயிரே’ என்றதனால்
இதில் “மக்களெனப்படுவோர் ஐம்பொறியுணர்வேயன்றி மனமென்பதோர்
அறிவும் உடையவர். முப்பத்திரண்டு வயந்தான் அளவிற்பட்டு அறிவோடு புணர்ந்த ஆடூஉ
மகடூஉ மக்களெனப்படும்”11 என்று
பேராசிரியர் குறிப்பிடுகின்றார்.
‘தாமே’ யெனப் பிரித்துக் கூறினமையான்
நல்லறிவுடையாரென்றற்குச் சிறந்தாரென்பதுங் கொள்வென என்று பேராசிரியர் கூறுகிறார்.
இவ்வாறு தொல்காப்பியர் கூறிய செய்தி இன்று மனிதவியல், மனவியல் போன்ற மனிதன் தொடர்பான
பல்வேறு உயிரியல் ஆய்வுகள் மலர்வதற்கு காரணமாய் அமைவது வெளிப்படுகிறது.
‘பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’
என்றதனால் குரங்கு முதலாகிய விலங்கினுள் அறிவுடையன எனப்படும் மனவுணர்வுடையன
உளவாயின், அவையும் ஈண்டு ஆற்றிவுயிரோ யியங்குமென்பது பேராசிரியரின் கருத்தாகும்.
எனவே விலங்கும் பறவையும் என மேற்கூறப்பட்ட ஐயறிவுயிர்களுள் குரங்கு, யானை, கிளி
முதலியவற்றுள் மனவுணர்வுடையன உளவாயின் அவையும் ஆறறிவுயிரில் அடங்கும் என்பது
புலனாகும். இச்செய்தி இன்று விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள வேறுபாட்டை
அறிவதற்கு உயிரியல் துறையில் நீகழும் ஆய்வுகளுக்கு பெரிதும் துணைநிற்கின்றது.
இவ்வாறாகக் காணப்படும்
தொல்காப்பிய உயிரியல் செய்திகள் இன்றைய உயிரியலாரின் வகைப்பாட்டின் அடிப்படையில்
ஓரறிவுயிர் தாவர இனங்களாகவும்; இரண்டு,
மூன்று, நான்கறிவுயிர்கள் முதுகெலும்பற்றவைகளாகவும்; ஐந்து,
ஆறறிவுயிர்கள் முதுகெலும்புடையவைகளாகவும் காணப்படுகின்றன. முதன் முதலில் “தாவரங்கள் மற்றும் விலங்குகள் பற்றிய அறிவியல் பிரிவுக்கு உயிரியல் (Biology)
என்று பெயரிட்டவர் 1744 – 1829 ல் வாழ்ந்த பிரெஞ்சு நாட்டு அறிஞர்
லாமார்க் ஆவார்.”12 இவர்தான்
விலங்குகளை முதுகெலும்பற்றவை, முதுகெலும்புடையவை என்றும் பிரித்தார். ஆனால்
தொல்காப்பியரோ கி.மு. 7-ஆம் நூற்றாண்டிலேயே புறக்காழ், அகக்காழ் என்பது
தாவரவியலின் ஒருவித்திலை, இருவித்திலை என்ற பிரிவுக்கும், புலனுறுப்பு
அடிப்படையில் பகுத்த உயிரின பகுப்பு விலங்கியலின் முதுகெலும்பற்றவை,
முதுகெலும்புடையவை என்ற பிரிவுக்கும்
வழிவகுத்துள்ளது என்பதை தொல்காப்பிய பொருளதிகார மரபியலில் காணப்படும் சில
நூற்பாக்கள் தெளிவுபடுத்தி நிற்பதை நாம் தெளியலாம்.
சான்றெண்
விளக்கம்
1.
மு. சண்முகம்
பிள்ளை (ப.ஆ), தொல்காப்பியம் –
பொருளதிகாரம் –இளம்பூரணம்,
ப- 175
2.
கழக வெளியீடு,
தொல்காப்பியம் – பொருளதிகாரம் – பேராசிரியம், ப – 471.
3.
கு.வி.
கிருஷ்ணமூர்த்தி, தமிழரும் தாவரமும், ப – 56.
4.
மு. சண்முகம்
பிள்ளை (ப. ஆ), மேலது, ப – 175.
5.
மேலது, ப –
176.
6.
மேலது, ப –
176.
7.
மேலது, ப –
176.
8.
மேலது, ப –
176.
9.
வே.
நெடுஞ்செழியன், தமிழர் கண்ட தாவரவியல், ப – 9,
10.
மு. சண்முகம்
பிள்ளை (ப. ஆ), மேலது, ப –
176.
11.
க.
வெள்ளைவாரணன், மேலது, ப – 53.
12.
ந.
முத்துக்குமாரசாமி, க. பழனிவேல், பரிணாமம், ப – 6 – 7.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக