திங்கள், 4 செப்டம்பர், 2017

திருக்குறள் சுட்டும் இயற்கை வேளாண்மை

திருக்குறள் சுட்டும் இயற்கை வேளாண்மை

சு.பிரபாகரன்

(இக்கட்டுரை 2016, சனவரியில் அழகப்பா பல்கலைக்கழத்தில் நடைபெற்ற திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்க ஆய்வுக்கோவையில் வெளியிடப்பட்டுள்ளது.)

உலகில் உள்ள உயிரினங்களில் மிகவும் இன்றியமையாதது மனிதப் படைப்பாகும். இம்மனிதன் உயிர்வாழ்வதற்கு அடிப்படைத் தேவையாக அமைவது உணவு, உடை, உறைவிடம் ஆகும். இவற்றில் உணவே முதன்மையானது. இவ்வுணவுதான் மனிதனுக்குத் தேவையான அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களையும், ஆற்றல்களையும் வழங்கி நோயின்றி வாழ வழிவகுக்கின்றது. இந்த உணவை உற்பத்தி செய்வதில் இன்றியமையாததாகத் திகழ்வது வேளாண்மைத் தொழிலாகும். இவ்வேளாண்மைத் தொழிலின் தோற்றம், இன்றியமையாமை, திருக்குறளில் இடம்பெற்றுள்ள இயற்கை வேளாண்மைச் செய்திகள் பற்றிக் காண்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

வேளாண்மைத் தோற்றம்

நாம் எந்த ஒரு துறையின் தோற்றத்தைப் பற்றித் தெளிவுற அறிய வேண்டின் அத்துறையின் வரலாற்றுப் பின்புலம் இன்றியமையாததாகின்றது. இதனடிப்படையில் வேளாண்மையின் தோற்றத்தைப் பழைய கற்காலம், புதிய கற்காலம் என்னும் வரலாற்றுப் பின்புலத்தில் பின்வருமாறு காண்போம்.

மனிதன் ஆரம்பக் காலக்கட்டத்தில் இயற்கையில் கிடைத்த காய்கள், கனிகள், கிழங்குகள், மிருகங்கள் போன்றவற்றை உணவாக உண்டு நாடோடியாக வாழ்ந்து வந்தான். இதன்பின் சிக்கிமுக்கிக் கற்களை உரசி நெருப்பைக் கண்டுபிடித்து காய்கள், கிழங்குகள் மற்றும் வேட்டையாடும் விலங்குகள் போன்றவற்றைச் சமைத்துண்டான். பின் ஆண், பெண் வேறுபாட்டை அறிந்து இலைகள், மரப்பட்டைகள், விலங்குகளின் தோல் போன்றவற்றால் தனது உடலைப் பாதுகாத்துக் கொண்டான். இவ்வாறு வாழ்ந்தக் காலமே வரலாற்றில் பழைய கற்காலம் அல்லது பேலியோலிதிக் காலம் (Palaeolithic Age)ஆகும். இலைகள், மரப்பட்டைகள், விலங்குகளின் தோல் போன்றவற்றால் தனது உடலைப் பாதுகாத்துக் கொண்ட மனிதன் நிலையான வாழ்க்கையை மேற்கொண்டான். நிலையான வாழ்க்கையை மேற்கொண்டதன் விளைவாகத் தனக்குத் தேவையான உணவுகளைத் தானே உற்பத்தி செய்துகொண்டான். இவ்வாறு உற்பத்தி செய்ததின் தொடக்கமே வேளாண்மையின் தோற்றம் ஆகும். மனிதன் நிலையான வாழ்க்கையை மேற்கொண்டு உணவுப் பொருட்களை உற்பத்தி செய்த காலமே வரலாற்றில் புதிய கற்காலம் அல்லது நியோலிதிக் காலம் (Neolithic Age) ஆகும். இவற்றைப் பழைய கற்காலத்தில் மனிதன் உணவைத்தேடி நாடோடியாக அலைந்தான். பழங்கள், காய்கள், கிழங்குகள் மற்றும் கொட்டைகளைச் சேகரித்து உண்டான். பின் மிருகங்களை வேட்டையாடினான். சுpக்கி முக்கிக் கற்களை உரசி நெருப்பைக் கண்டு பிடித்தான். இலைகளாலும், மரப்பட்டைகளாலும், மிருகங்களின் தோலினாலும் தன் உடலைப் பாதுகாத்துக் கொண்டான். புதிய கற்காலத்தில் மனிதன் வேளாண்மையில் ஈடுபட ஆரம்பித்தான்1 என்பதின் மூலம் தெளியலாம்.

இந்தப் பழைய, புதிய கற்காலத்தை வரலாற்று ஆசிரியர்கள் வரலாற்றுக்கு முந்திய காலம் என்பர். வரலாற்றுக்கு முந்திய காலம் என்பது கி.மு.4000 முதல் கி.மு.3500 வரையிலான காலம் ஆகும். ஆகவே, வேளாண்மை தோற்றம் பெற்றது வரலாற்றுக்கும் முந்திய காலம் அல்லது கற்காலம் என்பதனை நாம் ஐயமுறத் தெளியலாம்.

வேளாண்மையின் இன்றியமையாமை

வரலாற்றுக்கும் முந்திய காலத்தில் தோற்றம் பெற்ற வேளாண்மையே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாதக் காரணமாகும். நாம் ஒரு நாட்டின் இயற்கை வளங்களைச் சரியாகவும், சிறப்பாகவும் பயன்படுத்துவதன் மூலமே தனிமனித வருமானத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல முடியும். இவ்வியற்கை வளங்களை நாம் அதிகம் பயன்படுத்தி செய்யும் தொழிலே வேளாண்மைத் தொழிலாகும். இவ்வேளாண்மைத் தொழிலே நாட்டின் இன்றியமையாதத் தொழிலாகக் கருதப்படுகிறது. ஏனெனில், சுழன்று கொண்டிருக்கும் இவ்வறிவியல் யுகத்தில் எத்தனையோ தொழில்களும் துறைகளும் உருப்பெற்றாலும் அனைத்து மக்களுக்கும் பசியின்றி உணவளிப்பது வேளாண்மைத் துறையேயாகும். இதனையே வள்ளுவர்,
                
                “சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
              உழந்தும் உழவே தலை”   (குறள்.1031)
என்கிறார்.

இவ்வேளாண்மை செய்யும் உழவர்களே புறத்தொழில் செய்து பசியாறும் அனைவருக்கும் முதன்மையானவர், அச்சாணிப் போன்றவர். இவற்றை வள்ளுவர்,

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது
            எழுவாரை எல்லாம் பொறுத்து”   (குறள்.1032)

என்னும் குறள் மூலம் கூறுகிறார்.

இந்திய நாட்டின் மொத்த மக்கள் தொகை 130 கோடியாகிவிட்ட இந்த நிலையிலும் 60 விழுக்காடு மக்களுக்கு வேலை வழங்கும் துறை வேளாண்மைத் துறையாகும். நாட்டில் நிலவும் பசி, பட்டினி, பஞ்சம், வறுமை போன்றவற்றை வேளாண்மை மூலமே போக்க முடியும். 1990-இல் ரஷ்யாவில் கடும் உணவுப் பஞ்சமும், சட்ட ஒழுங்கு சீர்குலைவும் நேரிட்டன. இதற்கு முக்கியக் காரணம் அங்கு நிழவிய விவசாய வீழ்ச்சியேயாகும்.2 ஆகவே ஒரு நாட்டில் பஞ்சம், பசி, பட்டினி, வறுமை போன்றவை ஒழிந்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வேளாண்மையே இன்றியமையாததாய் காணப்படுகின்றது.

திருக்குறளில் இயற்கை வேளாண்மை

நாட்டின் வளர்ச்சியில் இன்றியமையாமையாகக் கருதப்படும் வேளாண்மையை இரண்டாகப் பகுக்கலாம். அவை, 1.இயற்கை வேளாண்மை, 2.வேதி வேளாண்மை ஆகியனவாகும். இவற்றில் இயற்கை வேளாண்மை என்பது இயற்கையில் கிடைக்கக்கூடியவற்றை வைத்து மண்வளம், மனிதவளம் மற்றும் சுற்றுச்சூழல் போன்றவைகளுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி இயற்கை உரங்களைப் பயன்படுத்தி வேளாண்மை செய்தலாகும். வேதி வேளாண்மை என்பது அதிக விளைச்சலுக்காக மண்வளம், மனிதவளம் மற்றும் சுற்றுச்சூழல் போன்றவற்றைக் கருத்தில் கொள்ளாது இவற்றிற்கு ஊறுவிளைவிக்கும் வேதி உரங்களைப் பயன்படுத்தி வேளாண்மை செய்தலாகும்.

வேளாண்மையில் பயன்படுத்தப்படும் இயற்கை உரமே வேளாண்மை உற்பத்திக்கு அடிப்படையானது. உயிரிய உரங்கள், பசுந்தாள் உரங்கள், இயற்கைக் கழிவுகள், மக்கியக் குப்பைகள், மக்கிப்போன இலைதழைகள், கதிர் அறுக்கப்பட்ட தானியங்களின் எச்சங்கள், பிராணிகள், பறவைகளின் எலும்புகள், வைக்கோல், கொளிஞ்சிச்செடி, எருக்கு முதலானவைகள் இயற்கை உரங்களாகும். இவைகளே மண்வளம், மனிதவளம் மற்றும் சுற்றுச்சூழல் போன்றவைகளுக்கு ஊறு விளைவிக்காத உரங்களாகும். இவ்வியற்கை வேளாண்மைப் பற்றி திருவள்ளுவர்,
                
           “தெடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்துஎருவும்
          வேண்டாது சாலப் படும்”   (குறள்.1037)

என்று கூறுகிறார்.

உழவனானவன், “ஒரு பலம் புழுதி கால் பலம் ஆகும்படி தன் நிலத்தை உழுது காயவிட்டால் அதில் ஒருபிடி எருவும் இட வேண்டாமல் அந்நிலத்தில் பயிர் செழித்து விளையும்3 என்பதாம். இதில் எருஎன்பது பயிர்களுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் சாணம், மக்கியத் தாவரக்கழிவு போன்ற இயற்கை உரம்4 ஆகும். மேற்கண்ட உயிரிய உரங்கள் முதல் எருக்கு வரையிலான இயற்கை உரங்களைத் திருவள்ளுவர் 2046 ஆண்டுகளுக்கு முன்னமே எருஎன்ற சொல்லின் மூலம் சுட்டிச் சென்றமை அவரின் ஆழ்ந்தப் புலமையை விளக்குகிறது. ஆகவே, ஒரு உழவன் தன் நிலத்தில் (இயற்கை) உரம் இடாமலேயே நன்கு உழுது பக்குவப்படுத்தினால் அந்நிலத்தில் நல்ல விளைச்சல் உண்டாகும் என்பது தெளிவாகின்றது.
மேலும்,

ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின்
          நீரினும் நன்றுஅதன் காப்பு”   (குறள்.1038)

என்ற குறளில், வேளாண்மை செய்யும் முறையினையும் சுட்டுகிறார். உழவன் தன் நிலத்தை நன்கு ஏர் விட்டு உழுது, பின் எரு இடுதல் வேண்டும். இந்த இரண்டும் செய்தபின் களை நீக்கல் வேண்டும். களை நீக்கியப் பிறகு நீர்;ப்பாய்ச்சுதலைவிட அதனைக் காவல் காக்க வேண்டும் என்று இயற்கை வேளாண்மை செய்யும் முறையைத் திருவள்ளுவர் விளக்குகிறார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை நம் சொந்த நிலங்களில் நாம் இவ்வியற்கை முறையிலேயே வேளாண்மை செய்தமை குறிப்பிடத்தக்கது.

முடிவுரை

ஒரு நாட்டின் முதுகெலும்புஎனக் கருதப்படும் வேளாண்மை, வரலாற்றுக்கும் முந்திய காலத்தில் தோற்றம் பெற்று, நாட்டின் வளர்ச்சியில் இன்றியமையாத பங்கினை வகிக்கின்றது. இவ்வியற்கை வேளாண்மை மக்கள், அஃறிணைகள் மற்றும் சுற்றுச் சூழலிற்குச் சிறந்ததென்பதையும், இவ்வேளாண்மை திருக்குறளில் மேற்கண்டவாறு இடம்பெற்றுள்ளமையையும் இக்கட்டுரை விளக்கி நிற்கின்றது.

சான்றெண் விளக்கம்

1.   பாடநூல்       -  9-ஆம் வகுப்பு சமூக அறிவியல் (2005), ப.3.
2.   இணையம்      -  விக்கிப்பீடியா, வேளாண்மை, ப.4.
3.   மு.வரதராசனார்   -  திருக்குறள் தெளிவுரை, ப.210.
4.   …..          -  கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, ப.254.




2 கருத்துகள்:

  1. நீங்கள் சொன்ன தகவல் எதுவும் வேளாண்மையை குறிக்கவில்லை. உழவு விவசாயத்தை குறிக்கும் குறட்பாக்கள். திருவள்ளுவர் வேளாண்மையை வேறு விதத்தில் கூறுகிறார்.

    பதிலளிநீக்கு
  2. 🦚🌾🌾🌾🦚 இக்கருத்தை ஏற்கிறேன் மற்றும் சில கருத்து வெளிப்படவில்லை

    பதிலளிநீக்கு